Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

Anbumani Ramadoss

சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்து வரும் சூழலில் ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீட்டு கட்டு சூதாட்டம் இடம் பெற்றுள்ளது குழந்தைகள் மனதில் இதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் உடனே நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு கலக்கும் அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஆண்டே வலியுறுத்தியும் அதை பாடநூல் நிறுவனம் செய்யாதது கண்டிக்கத்தக்கது.

முழுக்கள் என்ற தலைப்பிலான கணிதப் பாடம் முழு எண்களைக் கொண்டு கூட்டல் மற்றும் கழித்தலை விளையாட்டு வடிவத்தில் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஆனால், எந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டுவது, எந்த எண்ணை கழிப்பது என்பதை சீட்டுக்கட்டுகள் மூலமாக அந்தப் பாடம் கற்றுத் தருவது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். பாடத்தில் சீட்டுக்கட்டுகள் படத்தை அச்சிட்டு அதை இரு மாணவர்கள் விளையாடுவதைப் போலவும், இடையில் ஆசிரியர் தலையிட்டு எவ்வாறு விளையாடுவது என்பதை கற்றுக்கொடுப்பது போலவும் முழுக்கள் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாடத்தின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதற்காக சீட்டுக்கட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீட்டுக்கட்டுகள் என்றாலே சூதாட்டம் தான் நினைவுக்கு வரும். குழந்தைகள் மாணவர் பருவத்தில் படிக்கும் விஷயங்களும், பழகும் விஷயங்களும் எளிதில் மனதை விட்டு அகலாது. இத்தகைய சூழலில் ஆறாம் வகுப்பு பாடத்தில் சீட்டுக்கட்டு படங்களை அச்சிட்டு அதைக் கொண்டு எவ்வாறு விளையாடுவது என்று கற்றுக் கொடுத்தால், பின்னாளில் அவர்கள் வளர்ந்த பின் சூதாட்டத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் இன்று ஆன்லைன் சூதாட்டம் தான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த சில ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 15 மாதங்களில் மட்டும் 34 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் என்ற உயிரைப் பறிக்கும் சுழலில் இருந்து மக்களைக் காக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு இன்னும் ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. இத்தகைய சூழலில் தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முழுக்கள் பாடம் கற்பிக்கப் பட உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்; அதன் தீய விளைவுகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களை மீட்க வேண்டும் என்று போராடி வரும் நிலையில், மாணவர்களுக்கு சூதாட்டம் குறித்த சிந்தனையைத் தூண்டும் பாடத்தை அனுமதிக்கக் கூடாது; அந்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

ஆறாம் வகுப்பு கணிதப் பாடத்தில் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான பாடம் இருப்பது எனது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அந்தப் பாடத்தை நீக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் நாள் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், நடப்புக் கல்வியாண்டிலும் அந்த பாடம் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். மூன்றாம் பருவம் வரும் ஜனவரி மாதத்தில் தான் தொடங்குகிறது. அதற்கு முன்பாக சூதாட்டத்தை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை பாடநூலிலிருந்து நீக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் மனதில் சூதாட்டம் குறித்த சிந்தனை எழுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version