ஈகோவை விட்டு கூட்டத்துக்கு வந்த அன்புமணி ராமதாஸ்! மக்கள் மத்தியில் பெருகிய ஆதரவு
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது குறித்த விவாதங்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இந்நிலையில் இதனால் தமிழகத்திற்கு ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்க ஆளும் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக கூட்டணி கட்சிகளுடன் எதிர் அணியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதே போல எதிரணியில் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார்.
மற்ற மாநிலங்களை போல தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் பிரச்சனைக்காக அரசியலை மறந்து அனைத்து கட்சியினரும் ஒன்றிணைவதில்லை என்ற குற்றச்சாட்டானது காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் அதை சரி செய்யும் வகையிலும் பல்வேறு முயற்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் மாநில உரிமை பறிபோகும் நிலையில் இந்த விவகாரத்தில் வேறுபாடுகளை மறந்து பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் மற்ற கட்சிகள் அனைத்தும் இரண்டாம் கட்ட தலைவர்களை அனுப்பிய நிலையில் பாமக தரப்பில் அக்கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டது தமிழக அரசியலில் வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய அளவில் முக்கிய பிரச்சனையாக உள்ள இந்த தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் கடமைக்கு இரண்டாம் கட்ட தலைவர்களை அனுப்பியுள்ள நிலையில் பாமக சார்பில் அக்கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டது கட்சி சார்பற்ற இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் நிச்சயம் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதற்கு பதிலாக தமிழகத்தின் பங்களிப்பு என்னவோ அதையே தொகுதிகளை உயர்த்தும் போதும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இதற்காக தென் மாநிலங்கள் அனைத்திற்கும் சென்று ஆதரவை பெற முயற்சிக்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்பதையும் மத்திய அரசிடமிருந்து உரிய விளக்கம் பெற வேண்டும். அதற்கும் அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து ஒவ்வொருவரும் மக்கள் நலன் சார்ந்த கடந்த கால பாமகவின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.