Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்.. தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய மருத்துவர் அன்புமணி..!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலைக்கள் நிகழ்ந்து வந்ததை அடுத்து ஆன்லைன் சூதாட்டம் சமூக பிரச்சனையாக உருமாறியது. இதனையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் நிரந்தரமாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றிய நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதற்கு பலதரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பி விட்ட பின் அரசு அமைதியாக இருக்க கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் அது இன்னும் தடை செய்யப்படாததால் ஒன்றரை ஆண்டுகளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர சட்டம் காலாவதியான பின்னர் 16 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவுக்கு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய கடமை ஆளுனருக்கும் இருக்கிறது.

அதை உணராமல் தற்கொலைகளை ஆளுனர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி விட்டதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைத்து அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது. ஆளுனரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவளிக்க பா.ம.க. தயாராக இருக்கிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version