பொய்யான செய்தி வெளியிட்டால்… முதல்வர் எச்சரிக்கை!

0
148

ஊடகங்களில் பொய்யான செய்தியை வெளியிட்டால் அந்த ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஊடகங்கள் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க பொய்யான மற்றும் கற்பனையான செய்திகளை வெளியிட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், அதேபோல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் என்ற பெயரில் வதந்திகள் அதிகம் பரப்புவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக அதிகளவு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசுக்கு எதிராக பொய்யான, அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இதே போன்ற ஒரு சட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி அவர்கள் முதல்வராக இருந்தபோது இயற்றியிருந்தார். ஆனால் அந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதன் காரணமாக அவர் பின்வாங்கினார். ஆனால் இம்முறை தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் இந்த சட்டம் முழுமையாக இயற்றப்பட்டு பொய்யான செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

உண்மையான நடுநிலையான செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தால் எந்தவித பாதிப்பும் இருக்காது. ஆனால் டிஆர்பி ரேட்டிங்கிற்காக அவதூறான செய்திகளை வேண்டுமென்றே வெளியிடும் ஊடகங்களுக்கு இந்த சட்டத்தால் சிக்கல் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் செய்தி ஊடகங்களையும் வைத்துள்ள நிலையில் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நடுநிலையான செய்திகளை தற்போது அரிதாகவே இருப்பதாக சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்