டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்!
கடந்த ஒரு வருடமாகவே அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளதால் கிட்ட தட்ட அனைவருமே மன உளைச்சலில் தான் உள்ளோம். பெரியோருக்கு வீட்டு செலவுகள் மற்றும் ஈ.எம்.ஐ.கள் மன உளைச்சல் என்றால் பிள்ளைகளுக்கோ பள்ளி செல்லாததாலும், வீட்டிலேயே உள்ளதாலும், வெளியே மற்ற பிள்ளைகளுடன் விளையாட செல்லாததாலும் மன உளைச்சலில் உள்ளனர்.
இந்த கொடுமையான காலங்கள் மாறும் அதுவரை நாம் அனைவரும் கொஞ்சம் பொறுமையாகவும், அன்புடனும், அரவணைப்புடனும் இணைந்து வாழ்வோம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் இளையபெருமாள் இவருடைய 16வயது மகன் மனோஜ் குமார் ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மகன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
அதிக நேரம் வீட்டிலேயே டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிவி பார்ப்பதற்காக பெற்றோரிடம் ரிமோட் தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய பெற்றோர்கள் ரிமோட் எல்லாம் தர முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மகன் மனோஜ் குமார் ஆத்திரத்தில் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுள்ளான்.
இதையடுத்து நீண்ட நேரமாகியும் சிறுவன் வெளியே வராததால் பயந்து போன பெற்றோர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சிறுவன் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர் டிவி பார்ப்பதற்காக ரிமோட் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.