திருச்சியில் நரிக்கு வெடிவைத்து கொன்ற சம்பவம் விலங்குகள் மீதான வன்முறையை தொடர்கதையாக மாற்றியுள்ளது.
இந்தியாவில் விலங்குகளை குண்டு வைத்து தாக்கும் விபரீத வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கேரளாவில் யானை ஒன்றுக்கு அண்ணாசி பழத்தில் வெடிவைத்து பின்னர் அந்த யானை உணவு உண்ணமுடியாமல் தண்ணீரில் நின்று கடைசியில் உயிர்விட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியாக்கியது.
இதைத்தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் பசுவிற்கு கோதுமை மாவில் வெடிவைத்து அதன் வாய் சிதறிப்போன சம்பவமும் மக்களிடையே கடும் கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதிகளில் வன விலங்குகளை சிலர் சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், திருச்சி பேரூர் பகுதியில் சாக்குப்பை எடுத்துச் சென்ற நபர்களை சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் விசாரித்தனர். அவர்கள் கொண்டு சென்ற பையில் வாய்கிழிந்த நிலையில் இறந்த நரி ஒன்று கிடைத்தது. இது சம்பந்தமாக 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இவர்களிடம் இருந்து விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் மிக ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. விலங்குகள் மீது தொடர்ந்து வன்முறையை நடத்தும் சம்பவம் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.