இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் 1978ஆம் ஆண்டு, சென்னையில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.
சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக 1978ஆம் ஆண்டு, செப்டம்பர் 4ஆம் தேதி, “பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” உருவாக்கப்பட்டது.
பின்னர், 1982ஆம் ஆண்டு ‘பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்’ என்னும் பெயரிலிருந்து ‘அண்ணா பல்கலைக்கழகம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.
2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு, பின் சேர் பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
நிர்வாக வசதிகளுக்காக 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அண்ணா பல்கலைக்கழகம், கீழ்க்கண்ட 6 பல்கலைக்கழகமாக செயல்பட்டு வந்தது.
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – கிண்டி வளாகம்.
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – தரமணி வளாகம்.
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி.
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – மண்டல அலுவலகம், திருநெல்வேலி.
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – மண்டல அலுவலகம், மதுரை.
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்.
அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைக்க, 2007ஆம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
அண்மையில், தேசிய அங்கீகாரக் குழு (National Accreditation Committee) அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 நட்சத்திர அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான “ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்”, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆக்கக்கூறு கல்லூரியான மெட்ராசு தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.