Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் நிலைப்பாடு என்ன? உண்மையை உடைத்து கூறிய தலைவர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.அப்போது புதிதாக தொடங்கப்பட்ட இந்த மாவட்டங்களில் வார்டு வரையறை செய்வதில் இன்னும் முறையாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்து இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைத்தது தமிழக அரசு.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் இந்த விடுபட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், இந்த தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் எனவும், வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும், தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது பாஜகவை பொறுத்தவரையில் நாடு முழுவதும் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறது. ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அரசியல் சாசன சட்டத்தை மீறி எதுவும் செய்ய மாட்டார் என கூறியிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர்கள் தான் அவரை பார்த்து பயம் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

அதோடு அதிமுகவும் , பாஜகவும் கூட்டணியில் தான் இருக்கிறது, ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என கூறியிருக்கிறார். ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு என கூறியிருக்கிறார்.

Exit mobile version