பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக நாளைய தினம் பொறுப்பேற்க இருக்கின்ற அண்ணாமலை எங்களுடைய எதிரி திமுக தான் என்று தெரிவித்திருக்கிறார். எங்களுடைய எதிரி திமுக தான் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்று அவர் உறுதியாக தெரிவித்து இருக்கின்றார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்து வந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நாளைய தினம் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இப்படியான நிலையில், அவருக்கு தமிழகம் முழுவதும் சிறப்பான வரவேற்பும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.நேற்றைய தினம் சேலம் மார்க்கமாக சென்னை வந்த அண்ணாமலை கொண்டலாம்பட்டி அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் பாஜக-வின் தொண்டர்கள் இடையில் அவர் உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பொய்யை மட்டுமே கொள்கையாகக் கொண்டு நடந்து வருகிறது என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டின் சென்ற மூன்று ஆண்டு கால அரசியலை உற்று நோக்கினால் திமுகவின் எதிரி பாரதிய ஜனதா மட்டுமே என்பது வெட்ட வெளிச்சமாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதே போல நாங்களும் முடிவு செய்து இருக்கின்றோம் எங்களுடைய எதிரி திமுக தான் என்று பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தும் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக திமுக தன்னுடைய அரசியல் சித்து விளையாட்டை முன்னெடுத்து வருகிறது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
அதற்கு முன்னதாக ஈரோட்டில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அண்ணாமலை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சுமார் 150 சட்டசபை உறுப்பினர்கள் வெற்றியடைந்து தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைப்பதே என்னுடைய லட்சியம் என்று சூளுரைத்து இருக்கிறார்.