Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்ப மாட்டாரா? பார்த்துவிடலாம் அண்ணாமலை விட்ட சவால்!

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே பாஜகவின் சார்பாக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றும் போது 70 ஆண்டு கால தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

டெல்லிக்கு செல்வதற்கு முதல்வருக்கு பயம். அதனால்தான் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் டெல்லி செல்வதற்கு தயங்குகிறார்கள்.

பாஜக அருகில் வருவதற்கே ஒரு தகுதி வேண்டும், திமுகவில் எந்த தலைவருக்கும் பாஜக தொண்டனுடன் நிற்பதற்கான தகுதி இல்லை என தெரிவித்தார். மேலும் இது ஒரு ஸ்டிக்கர் அரசு திமுக ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்னரே நான் படித்த கல்லூரி ஆரம்பமாகிவிட்டது என கூறினார்.

நான் படித்ததற்கு திமுக காரணமா? என்பது எனக்கு தெரியாது, ஆனால் நான் அரசியலுக்கு வந்ததற்கு திமுக தான் காரணம். நடுத்தர சாதாரண வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த என்னை திமுக நாசக்கார ஆட்சியின் பாதிப்பு தான் அரசியலுக்கு வரவைத்தது என தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே குடும்பம் போல இங்கே ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது, சிவசேனா கட்சியைப் போல இங்கே தமிழகத்தில் திமுக உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் பத்து பொருத்தமும் சரியாக இருக்கிறது.

அங்கே ஒரு ஏக்நாத்ஷிண்டே கிளம்பிவிட்ட நிலையில், இங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்ப மாட்டாரா? நிச்சயமாக கிளம்புவார். அதன் காரணமாக தான் திமுகவிற்கு தற்போது நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திமுகவிலிருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்புவார் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

Exit mobile version