அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்சார்பு விவசாயம் செய்பவர் என கூறுபவருமான அண்ணாமலை அண்மையில்தான் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் கோவையில் உள்ள சித்தாபுதூர் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். கோவை வந்த அவருக்கு மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்து உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொது முடக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது ஏராளமான பாஜக நிர்வாகிகள் சித்தாபுதூரின் வி.கே.மேனன் சாலையில் உள்ள பிஜேபி அலுவலகம் முன்பு பெரும் திரளாக திரண்டனர்.
அங்கு தனிமனித இடைவெளி முற்றிலும் இல்லாமல், அதனை கடைபிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று சம்பந்தமாக ஊரடங்கு பற்றிய வழி முறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெருந்தொற்று காலத்தில் தனிமனித இடைவெளி கடைபிடிக்காததன் காரணமாகவும், ஊரடங்கு வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தினாலும் கொரோனா தடுப்பு பிரிவின் கீழ், முன்னால் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது கோட்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகளான, மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர், மாநில இணைச்செயலாளர் கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர் ஜி.கே செல்வகுமார் மற்றும் மாவட்ட தலைவரான நந்தகுமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுதல், தொற்றுநோய் காலத்தில் ஒன்று கூடுதல், நோய் பரப்பும் விதமாக செயல் பட்டது என உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.