இந்த சட்டத்தை உடனே அமல்படுத்துங்கள்! தமிழக அரசை வலியுறுத்திய அண்ணாமலை!

0
133

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல் பேட்டியில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது போதுமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து தமிழக பாஜகவின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி இருக்கிறார் இந்த போராட்டத்திற்கு.

துணைத்தலைவர்கள் எம்.என் ராஜா, வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி பொதுச் செயலாளர் கரு நாகராஜன், உட்பட அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். மூத்த நிர்வாகிகள் பொன்ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், எச் ராஜா, நயினார் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன், உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.

இந்தப் போராட்டத்தின் போது உரையாற்றிய அண்ணாமலை தஞ்சாவூர் மாவட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டு இருப்பது நெஞ்சை பதற வைக்கும் செயலாக இருக்கிறது. இதில் உண்மை என்ன என்பது முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பதை போல அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருக்கிறார்.

மாணவி லாவண்யாவின் மரணம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது அதில் மாணவி என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார் என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் படிக்கும் பள்ளியிலேயே மாணவிக்கு நடைபெற்ற கொடுமைகள் கண்டிக்கத்தக்கது இதன் காரணமாக, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே கோபத்தில் உள்ளது என்று கூறியிருக்கிறார்.

மாணவி லாவண்யா கட்டாயமான மதமாற்றத்திற்கு உட்படாததால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார். அதோடு இதன் காரணமாக, அவர் மன உளைச்சலுக்கும் ஆளாகி தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார். இந்த கொடுமைகளை பார்த்து எவ்வாறு எதுவும் செய்யாமல் இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆகவே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் 2 வருடங்களாக மாணவி அனுபவித்து வந்த கொடுமைகள் என்னென்ன? இந்த கொடுமைகளுக்கு பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் ?என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் எந்த சமயத்திலும் நடைபெறக் கூடாது என்றால் தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் மறுபடியும் அமல்படுத்தப்பட வேண்டும். மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் இந்த போராட்டம் வெறும் தொடக்கமே என்று உரையாற்றியிருக்கிறார் அண்ணாமலை.