அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்
தற்போதைய தமிழக அரசியலில் தமிழக அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது.
மாநாட்டில் பேசியது :-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில், “சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே சிறந்தது என்றும் டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்க்க போராட மாட்டோம். ஒழித்துக்கட்டத் தான் முயற்சிப்போம், அதுபோல தான் சனாதனம் என்றும் உதயநிதி அவர்கள் பேசினார்.
அண்ணாமலையின் கடும் எதிர்ப்பு :-
இந்நிலையில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்? என்று கேள்வி எழுப்பினார். கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே, ‘சனாதன தர்மம்’ என்ற வார்த்தை இருந்தது என்பது நிதர்சனமான உண்மை என்றும் குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலின் பேசியதை நாட்டின் 142 கோடி மக்களும் கண்டிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
குறிப்பிட்ட கலாச்சாரத்தை அழிப்பதே இனப்படுகொலை என்றும் அதைதான் உதயநிதி அவர்கள் செய்வதாக அண்ணாமலை அவர்கள் கடுமையாக சாடினார்.
தற்போது தமிழக அரசியலில் அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, சனாதனம் குறித்து தாக்கி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.