Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! மீண்டும் ஜனவரி 28ல் திருப்பூரில் தொடக்கம்!

#image_title

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! மீண்டும் ஜனவரி 28ல் திருப்பூரில் தொடக்கம்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நடத்தி வந்த என் மண் என் மக்கள் நடைபயணம் வரும் ஜனவரி 28ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது என்று மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது நேற்று(ஜனவரி23) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் “உலகம் முழுவதும் திரும்பி பார்க்கும் வகையில் அயோத்தியில் பால ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் விழாக கோலம் பூண்டதை அனைவரும் பார்த்தோம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகவிழாவை காணும் வகையில் நேரலை நிகழ்ச்சிகள் போன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சியை முடக்கும் வகையில் தமிழக அரசு நடந்து கொண்டது. இந்த விஷயத்தில் தமிழக அரசு நடந்து கொண்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் முக்கியமான அறிவிப்பு எதைப் பற்றி என்றால் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம் பற்றி தான். தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள என் மண் என் மக்கள் நடைபயணம் மீண்டும் ஜனவரி 28ம் தேதி திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு தொகுதியில் இருந்து தொடங்குகின்றது என்பதை அறிவித்துக் கொள்கின்றேன்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு நாளுக்கு மூன்று சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு மக்களிடையே புகார்களையும் கேட்டுக் கொண்டு வருகின்றார். அண்ணாமலை அவர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் புகார் பெட்டியில் புகார் மனுக்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றது” என்று கூறினார்.

Exit mobile version