குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை-வெளியாகிறது அறிவிப்பு
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கடந்த மே மாதம் முதல் ஆட்சி செய்து வருகிறது.பத்து ஆண்டுகளாக பதவியில் இல்லாத திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு சலுகைகளை தேர்தல் வாக்குறுதிகளாக வாரி வழங்கியது.இதனையடுத்து ஆட்சியமைத்ததும் அதில் முதல்கட்டமாக ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்டார்.
அதில் குறிப்பாக கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு 4000 ரூபாய்,அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டவைகள் அடங்கும்.இதனையடுத்து புதியதாக பதவியேற்ற திமுக அரசுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமே இருந்தது.ஆனால் ஒரு சில தினங்களில் இதற்கு எதிரான குரல்கள் எழ ஆரம்பித்தன.திமுக அளித்த முக்கிய வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை சரியான பதிலை அளிக்காமல் சென்றது தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் திமுக அரசு கொண்டுவரவுள்ள நலத்திட்டங்கள் அனைத்தும் குடும்பத்திற்கு சரியாக செல்ல வேண்டும் என்பதால் அது பெண்கள் கைக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.இதனையடுத்து ரேஷன்கார்டு உள்ளவர்கள் அனைவரும் பெண்களை குடும்பத் தலைவிகளாக பெயர் மாற்றம் செய்ய ஆரம்பித்தனர்.அதேநேரத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து இதுவரை முறையான அறிவிப்பு வராததால் பல தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக இதற்காக போராட்டத்தையே நடத்தியது.நிலைமையை உணர்ந்த தமிழக அரசு இது குறித்து சாதகமான பதிலை அளித்துள்ளது.இந்நிலையில் தான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் அறிவித்திருந்தார்.
மேலும் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்கவும், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த வகையில் சுதந்திர தினத்தன்று இதுகுறித்து முறையான அறிவிப்பை வெளியிட அரசு முடிவு செய்துள்ளதாகவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.