Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!

#image_title

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!

மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் செகாவன் நகரில் இருந்து மினி பேருந்து ஒன்றில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 17 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊரான நாக்பூர் நோக்கி சென்றுள்ளனர். இந்த மினி பேருந்தினை கோம்தேவ் காவாடே என்பவர் இயக்கியுள்ளார். செல்லும் வழியில் அமராவதி பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த இவர்களது பயணம் மீண்டும் துவங்கியுள்ளது. அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், பாதி வழியில் விலை உயர்ந்த லக்ஜுவரி கார் ஒன்று இவர்களது மினி பேருந்தை தொடர்ந்து பின்னே வந்துள்ளது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் அந்த காருக்கு மினி பேருந்து ஓட்டுநரான கோம்தேவ் 2 முறை முந்தி செல்ல வழி விட்டுள்ளார் என்று தெரிகிறது. எனினும் அந்த கார் பேருந்தை முந்தி செல்லாமல் பின்தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த காரில் இருந்த மர்ம ஆசாமிகள் மினி பேருந்தினை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் தான் இந்த தாக்குதல் நடக்கிறது என்பதை சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியுள்ளார். இதற்கிடையே 4 முறை துப்பாக்கி கொண்டு தாக்கியதில் 4ம் முறை ஓட்டுநர் கோம்தேவ் கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த நிலையிலும் கோம்தேவ் தனது பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்தில் தொடர்ந்து 30 கி.மீ. பேருந்தினை இயக்கி சென்று தியோசா காவல் நிலையத்தில் கொண்டு சென்று பேருந்தினை நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

உடனடியாக காவல்துறையினர் ஓடி இவர்களுக்கு உதவி செய்துள்ளனர். பேருந்தில் இருந்த 3 பேர் இந்த துப்பாக்கி தாக்குதலில் காயமடைந்த நிலையில், அவர்களையும் ஓட்டுநர் கோம்தேவையும் காவல்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் இது குறித்து பேசிய ஓட்டுநர் கோம்தேவ், ‘அந்த லக்ஜூவரி காரின் பதிவெண் நினைவில் இல்லை. ஆனால் அது உத்தரப்பிரதேச மாநிலத்தின் பதிவெண் கொண்டிருந்தது’ என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அந்த காரில் இருந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவங்கியுள்ளனர். இந்த கொள்ளை கும்பல் நாசிக் பகுதியில் இருந்து இந்த காரினை சில நாட்களுக்கு முன்னர் திருடி வந்துள்ளனர். அதற்கான வழக்குப்பதிவும் உள்ளது என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர்களை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. மேலும், தனது உயிரை பணையம் வைத்து தனது பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் கோம்தேவை காவல்துறையினர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version