தாயை இழிவுப்படுத்தியதால் கண்ணீர் சிந்திய எடப்பாடி பழனிசாமி..!

0
132

தனது தாயை விமர்சித்து இழிவாக திமுகவின் ஆ.ராசா பேசியது குறித்து கண்ணீர் விட்டு மக்களிடம் முறையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

சட்டமன்ற பொது தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. அதில் ஒன்றாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய திமுக துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பிரசாரம் செய்தார். அப்பொழுது, அதிமுகவையும் முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்த ஆ.ராசா எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவாக பேசினார். முதலமைச்சர் என்றும் பாராமல் அவரது தாயாரின் ஒழுக்கத்தை விமர்சித்து இழிவாக ஆ.ராசா பேசியது அதிமுகவினரிடையேயும், பெண்களிடையும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், திமுகவினருக்கே அதிர்ச்சி அளித்தது.

ஆ.ராவின் செயலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், எம்பி கனிமொழியும் கண்டித்தனர். எனினும், ஆ.ராசாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுகவினர் ஆங்காங்கே அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் பிறப்பு குறித்து ஆ.ராசா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ, ஆ.ராசாவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இந்த நிலையில், சென்னை திருவொற்றியூரில் பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது தாயாரையும், தனது பிறப்பு குறித்தும் இழிவாக ஆ.ராசா பேசியது குறித்து வருத்தமடைந்ததுடன் தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் சிந்தினார். அவரவருக்கு தனது தாய் தான் தெய்வம் என்றும், எனது தாய் எனக்கு தெய்வம் என்றும், மறைந்த அவரை இழிவுப்படுத்துவதை எண்ணி வருந்துகிறேன் என்றார்.

என் தாயைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசியுள்ளார்? ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவெல்லாம் பேசுகிறார்கள்? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். என்னென்ன பேச்சுகளை வாங்க வேண்டியிருக்கிறது? ஒரு முதலமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால்…? உங்களுடைய நிலைமை என்ன ஆகும்? தாய்மார்களின் நிலைமை என்ன ஆகும்? சிந்தித்து பாருங்கள் எனக்கூறினார். மேலும், யார் பெண் குலத்தை இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும், ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை வழங்குவான் எனவும் தனது பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.