“அரியர் தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மட்டும் சொம்பயா?” என்ற பாணியில் ஸ்டாலின் விமர்சனம்

0
143

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் விலக்கு அளித்து, தேர்ச்சி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு ஸ்டாலின் பதிலளித்து வலியுறுத்தி உள்ளார். 

முன்னதாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் தவிர்த்து, ஏனைய ஆண்டுகளில் தேர்வு எழுத இருப்பவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்து இருந்தார்.

அதன் பின்பு அண்மையில் இறுதி ஆண்டு மாணவர்களும், பல ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களும் பிற பாடங்களில் அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தாலே எத்தனை அரியர் வைத்து இருந்தாலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவரான ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

பருவத் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், முதல்வரும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதும்,

ஊரடங்கால் பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை”

“பருவத் தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஊரடங்கு மார்ச் 24-ம் தேதியே அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டன”.

“ஏழை – எளிய, நடுத்தர மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தங்கள் பிள்ளைகளின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்தனர்”.

“கரோனா பேரிடரின் இன்னலுக்கு உள்ளானதால், சில கல்லூரிகளில் 70 சதவீத மாணவர்கள் கூட பருவத் தேர்வுக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்துள்ளார்கள் என்ற செய்திகள் வெளிவந்தன”.

“அதுபற்றி ஆலோசிக்காமல், தமிழக அரசு நியமித்த உயர்மட்டக்குழு, கட்டணம் செலுத்திய மாணவர்கள் குறித்து மட்டும் பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதல்வர் முடிவு எடுத்துள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “இதனால் பல கல்லூரிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஆகவே, கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்” என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.