பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!
ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் கல்வி நிலை உள்ளிட்டவைகள் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளை படித்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடையும். இன்றைய உலகில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. பல துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்வி. இந்த கல்வி அவர்களுக்கு முறையாக கிடப்பதை உறுதி செய்ய தமிழக அரசு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு என்று பல திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு தொடக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 1992 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்“.
இந்த திட்டம் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகும். இந்த பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் கடந்த 1997 முதல் 2001 ஆம் ஆண்டு வரை பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் வருகின்ற 25 வரை பெற்றுக் கொள்ளப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இந்த பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்து 18 வயது நிரம்பிய பெண் பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று அவர் தெரிவித்து இருக்கிறார். விண்ணப்பத்துடன் வைப்புநிதிப்பத்திரம் அசல், வங்கி பாஸ் புக் நகல், பயனாளியின் பாஸ்போட் சைஸ் போட்டோ, கல்விச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவைகளை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். இந்த விண்ணப்பங்கள் வருகின்ற 25 ஆம் தேதி வரை பயனாளிகளிடம் இருந்து வரவேற்க்கப்படுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.