பொதுவாக பிரதோஷம் என்பது விரதம் இருந்து சிவனை வழிபடக்கூடிய ஒரு நல்ல நாள். அந்த நல்ல நாளில் கோவிலுக்கு சென்று, அபிஷேகம் பார்த்து, வழிபாடு செய்து,சுவாமி உடன் திருவீதி உலா வந்து விரதத்தை முடிப்பது என்பது வழக்கம். ஏதேனும் ஒரு சூழ்நிலை காரணமாக அல்லது சிவன் கோவில் மிகவும் தூரமாக உள்ளது, செல்ல முடியாத சூழ்நிலை என்று நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பிரதோஷ வழிபாட்டினை செய்து கொள்ளலாம்.
இந்த பிரதோஷம் அன்று நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க முடியும் என்பவர்கள் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். ஒருவேளை மட்டும் உணவினை உண்டும் இருக்கலாம். அல்லது நீர் ஆகாரத்தினை மட்டும் குடித்துவிட்டும் இருக்கலாம். இது போன்ற எந்த முறைகளில் வேண்டுமானாலும் விரதத்தை கடைபிடிக்கலாம். இது அவரவர் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
பிரதோஷம் நாள் அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு, பூஜை அறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களுக்கும் பூக்களை வைத்து வழிபாடு செய்து விட்டு, நாம் இருக்கக்கூடிய விரதத்தை மாலை வரை தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரதோஷ நேரம் என்பது மாலை நான்கு முப்பது மணி முதல் 6:00 மணி வரை இருக்கும்.
இந்த நேரத்தில்தான் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும். சிவலிங்கம் வைத்திருந்தால் பால், தேன், சந்தனம், தயிர் இது போன்ற பொருட்களுள் நம்மால் என்ன முடியுமோ அதனைக் கொண்டு அபிஷேகம் செய்து கொள்ளலாம். சிவலிங்கம் இல்லாமல் புகைப்படம் மட்டும் தான் உள்ளது என்று கூறுபவர்கள் வில்வம் வாங்கி மாலையாக சூட்டி விட்டு, அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
தேவாரம், திருவாசகம் இது போன்ற பாடல்கள் தெரிந்தால் அதனை மூல மந்திரமாக கூறிக் கொள்ளலாம். இந்தப் பாடல்கள் தெரியாவிட்டால் சிவபுராணத்தை படித்துக் கொள்ளலாம். இதனை செய்த பிறகு சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். நமது வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய அவல் மற்றும் சர்க்கரை கலந்து கூட நெய்வேத்தியமாக வைக்கலாம்.
வெண்பொங்கல், சக்கரை பொங்கல் இது போன்று நம்மால் எது முடியுமோ அதனை நெய்வேத்தியமாக செய்து கொள்ளலாம். இதுவும் முடியாதவர்கள் ஒரு டம்ளர் பால், 2 வாழைப்பழம் ஆகியவற்றையும் நெய்வேத்தியமாக வைக்கலாம். வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை நெய்வேத்தியத்துடன் வைக்க வேண்டும். அதன் பிறகு நெய் தீபம் ஒன்றை ஏற்றிவிட்டு,தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டினை மாலை ஆறு மணிக்குள் செய்து முடித்துவிட்டு, 6:15 அல்லது 6:30 மணிக்கு பிறகு நமது விரதத்தை முடிவு செய்து உணவினை உண்ணலாம். சுவாமிக்கு நெய்வேத்தியமாக படைத்ததை முதலில் உண்டு விட்டு, அதன் பிறகு நமது உணவினை உண்ணலாம்.
விரதம் இல்லாமலும் மாலை நேரத்தில் சிவனுக்கு அபிஷேகம் அல்லது அர்ச்சனை செய்தும் வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது “சிவாய நமஹ, சிவாய நமஹ” என்று கூறினாலே பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும்.