தற்போது பலர் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு திட்டமிட்டு அதற்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஏற்றுமதி தொழில் ஆரம்பிப்பதற்கான முதல்கட்டமாக தயார் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
அதாவது ஏற்றுமதி ,இறக்குமதி ,தொழிலில் இறங்குவதற்கு முன்னர் எந்த பொருளை ஏற்றுமதி செய்ய போகிறீர்கள் என்பதை முதலில் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு பரிச்சயமான பொருள் சரக்கு தயாரிப்பை தேர்வு செய்வது நன்று, இந்தியாவில் பெரும்பாலும் வேளாண் சரக்குகளே ஏற்றுமதி ஆகின்றன. இதுபோக தொழில்துறை தயாரிப்புகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு எந்த சந்தையில் அதாவது எந்தெந்த நாடுகளில் வரவேற்பு இருக்கிறது. போட்டி கட்டணம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும். அன்னிய வர்த்தக கொள்கையின் கீழ் சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சலுகைகளும் கிடைக்கப்பெறுகின்றன.
உங்களுடைய தொழிலை பதிவு செய்வதற்கு முன்னர் அதற்கு நல்ல பெயர் மற்றும் முத்திரையை தேர்வு செய்ய வேண்டும், இதற்கு பின்னர் தொழிலை பதிவு செய்யலாமென்று தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து தொழில்களையும் போல ஏற்றுமதி தொழிலையும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும், இதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள் பெற வழக்கறிஞரை அணுகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏற்றுமதி தொழில் என்பது அந்நிய செலாவணி உள்ளிட்டவற்றை சார்ந்தது என்பதால் உங்களுடைய நிறுவனத்திற்கு வங்கியில் ஒரு நடப்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.
இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் செய்பவர்கள் IEC(exporter code) என்று சொல்லக்கூடிய ஏற்றுமதி இறக்குமதியாளர் கோடு எண் பெற வேண்டும். இந்த எண்ணை பெறுவதற்கு www.dgft.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.