நீ அந்த ஜாதியா? 14 வயது பள்ளி சிறுவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய வாலிபர்!
பள்ளி மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு வரக்கூடாது என்ற வகையில் குழந்தைகளுக்கு பாடங்கள் வழியாக அனைவரும் சமம் என்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சமூகத்தில் உள்ள சில மக்களால் இவர்கள் அந்த ஜாதி என்ற அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சில மாதத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தின்பண்டம் கேட்டு கடைக்கு வந்த பொழுது, அந்த கடை உரிமையாளர் உங்களுக்கெல்லாம் தின்பண்டம் தரக்கூடாது என ஊர் உத்தரவிட்டுள்ளது. இதனை உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள் என்று அனுப்பி வைத்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது மயிலாடுதுறையில் இதே போல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வல்லம் என்ற கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினந்தோறும் பள்ளி முடிந்ததும் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பார். வழக்கம்போல் நேற்று காத்திருந்தபொழுது, அங்கு வந்த ஒருவர் நீ என்ன ஜாதி என்ன ஊர் என்று கேட்டுள்ளார்.
இந்த சிறுவனும் நான் தாழ்த்தப்பட்ட ஜாதி எனக் கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதை கேட்ட அந்த நபர் காரணம் இன்றி சிறுவனை தாறுமாறாக தாக்க ஆரம்பித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அச்சிறுவனை மீட்டு பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கீழ் சாதி என்று கூறியதால், தன் மகனை இவ்வாறு முகம் தெரியாத நபர் தாக்கியது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சிறுவனை தாக்கிய நபரை தேடி வந்தனர். தாக்கியவர் கீழ நாஞ்சில் நாடு என்ற பகுதியை சேர்ந்த நடராஜன் என்பது தெரிய வந்தது. இவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.