விண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா!

0
226

விண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா! 

பழனி முருகன் கோவிலில் நடந்த தைப்பூச தேரோட்ட விழாவில் ஏற்பட்ட முழக்கம் விண்வரை அதிர்ந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் விழாவிற்கு சிகரமான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதையடுத்து இன்று  அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் கூடிய முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி பிறகு தீர்த்தம் கொடுத்தல்  நிகழ்ச்சி நடைபெற்றது. 

மதியம் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து மாலையில் தேரோட்டமும் நடைபெற்றது.  பெரியநாயகி அம்மன் கோவில் தொடங்கிய திருத்தேர் ரத வீதி வழியாக உலா வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தேரில் வீற்றிருந்த  முருகனை தரிசனம் செய்தனர். அவர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் வான் வரை எதிரொளித்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனின் தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை தரிசித்தனர். பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3 ஆயிரம் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.