ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நெஞ்சுவலி

0
154
Arrested accused in Armstrong murder case has chest pain

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த படுகொலை குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், திருவேங்கடம், மணிவண்ணன்,  கோகுல், சந்தோஷ், அருள், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன் மற்றும் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்ட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், திருவேங்கடம் என்பவர் போலீசார் விசாரணையின் போது தப்பி ஓட முயன்றதாக கூறி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய அவர்கள் பூவிருந்தவல்லி தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதகாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.