கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மருந்துகளை எடுக்க மத்திய அரசும் மாநில அரசும் மக்களுக்கு அறிவுறுத்தி வந்தனர்.
சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவற்றைத் தமிழக அரசே மக்களுக்கு வீடுதோறும் சென்று வழங்கி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 (Arsenicum Album) என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்குப் பின் இதே முறையில் மருந்து சாப்பிட வேண்டும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு, இந்த மருந்தை பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் ஆர்செனிகம் ஆல்பம் 30 மருந்தானது, சிறுநீரகங்களை பாதிக்கக்கூடும் என தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் துணை இயக்குநரும், மருத்துவ நிபுணர் குழுவின் பிரதிநிதியுமான பிரப்திப் கவுர் தெரிவித்துள்ளார்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள் இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.