9 நகரங்களில் நடைபெற உள்ள கலைத் திருவிழா : தமிழக அரசு புதிய அறிவிப்பு !!

0
195
#image_title

9 நகரங்களில் நடைபெற உள்ள கலைத் திருவிழா : தமிழக அரசு புதிய அறிவிப்பு !!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ‘சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ இந்த நிதியாண்டில் சென்னை மற்றும் 8 முக்கிய நகரங்களில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மேடை நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள், கிராமிய இசை கலைஞர்கள் பங்குபெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2022-2023 ஆம் நிதியாண்டில் சென்னை மாநகரத்தில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினையொட்டி 4 நாட்கள், 18 இடங்களில் நடைபெற்ற ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பினை பெற்றது. இதனால், 2023-2024 ஆம் நிதியாண்டில், சங்கமம் கலை விழா சென்னை மற்றும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் இந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை முதற்கட்டமாக நடத்தப்படும்.

இக்கலை விழாவின் வாயிலாக சுமார் 3000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறுவர். அதனைத் தொடர்ந்து சென்னையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் பிரம்மாண்ட சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது. இக்கலை விழாவின் வாயிலாக 2000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன்பெறுவர்.

பங்குக் கொள்வது எப்படி?

சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து, அத்துடன் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தொடர்புடைய கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு 06.10.2023-க்குள் பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்ப வேண்டும்.

கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.