மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட போராளி அர்த்தநாரீச வர்மா

0
410
Freedom Fighter Ardhanarishvara Varma rest place

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டவரான தமிழகத்தை சேர்ந்த அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினமான இன்று 27.07.2020 பெரும்பாலான இடங்களில் கொண்டாடப்படுகிறது.

சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட சுகவனபுரியில் 1874 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்த அர்த்தநாரீச வர்மா, தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார். தேச விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார்.

பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்தநாரீச வர்மாவின் கவிதைகள் பாரதியாரின் கவிதைகளுக்கு இணையான வீரியம் கொண்டவை. பல பத்திரிகைகளை தொடர்ந்து நடத்தி விடுதலை உணர்வை ஊட்டிய வர்மா ஏராளமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகள் விடுதலைப் போருக்கு உரமூட்டின.

வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, அவற்றைக் கண்டு அஞ்சாதவராக விளங்கியவர் அர்த்தநாரீச வர்மா ஆவார். பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரது இறுதி ஊர்வலத்துக்கு கூட யாரும் வராத போது, பாரதியாருக்காக துணிச்சலாக இரங்கல் பாடிய ஒரே கவிஞர் அர்த்தநாரீச வர்மா மட்டுமே.

அவரது இரங்கற்பா சுதேசமித்திரனில் வெளியானது. இந்திய விடுதலைக்காக வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தினார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பத்திரிகை நடத்துவதை தடுக்கக் கொண்டுவரப்பட்ட அச்சக சட்டத்தால் அர்த்தநாரீச வர்மா பாதிக்கப்பட்டார். வாரத்தில் 3 நாட்கள் வெளிவந்த இப்பத்திரிகை, அரச அடக்குமுறையால் நிறுத்தப்பட்டது.

வேலூரில் 1920 ஆம் ஆண்டு நடந்த அரசியல் மாநாட்டில் பேசிய தமிழ்த்தென்றல் திரு.வி.க பாரததேவி மீது புலவர்கள் பாடியுள்ள பாக்களை இன்னிசைக் கருவிகளுடன் பாராயணம் செய்யலாம். சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும், சேலம் அர்த்தநாரீச வர்மாவின் பாடல்களும் மக்களுக்கு தேசபக்தி ஊட்டுவது போலக் கற்றைக் கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவரின் சொற் பெருக்குகளும் அப்பக்தியை ஊட்டா என்று குறிப்பிட்டார்.

விடுதலைப் போரில் அர்த்தநாரீச வர்மாவின் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட பங்களிப்பை நிரூபிக்க இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை. காந்தியடிகள் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த அர்த்தநாரீச வர்மா, 17.2.1934 அன்று தேசத்தந்தை திருவண்ணாமலை வந்தபோது, அவருக்கு திருவண்ணாமலை மக்கள் சார்பில் பாராட்டு பத்திரம் வழங்கி பெருமை செய்தார்.

தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு வித்திட்டதில் அர்த்தநாரீச வர்மாவின் பங்கு மகத்தானது. மதுவிலக்கை வலியுறுத்தி நாடு முழுவதும் சென்று பரப்புரை மேற்கொண்டார். மதுவிலக்கு சிந்து எனும் பாடல் நூலினை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் 300 கிராமங்களைச் சேர்ந்த மக்களைக் கூட்டி மாபெரும் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக பிரிக்கப்படாத சென்னை மாகானத்தின் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ராஜாஜிக்கு தூண்டுகோலாக அமைந்தது அர்த்தநாரீச வர்மா நடத்திய இந்த மதுவிலக்கு மாநாடு தான்.

நாட்டுக்காகவே வாழ்ந்த, உழைத்த அர்த்தநாரீச வர்மாவுக்கு இந்த நாடும், சமூகமும் பரிசாக வழங்கியது வறுமை தான். சேலத்தில் பிறந்து தமது வாழ்வின் இறுதிக்காலத்தை திருவண்ணாமலையில் கழித்த அர்த்தநாரீச வர்மா தமது 90 ஆவது வயதில் 07.12.1964 அன்று காலமானார். நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிகளைத் தொகுத்தும், பாராட்டியும் கல்கி இதழில் அவரது நண்பரான ராஜாஜி புகழஞ்சலிக் கட்டுரை எழுதினார். அதைத் தவிர வர்மாவின் பணிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது சோகமாகும்.

இனியும் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மாவின் பணிகளுக்கும், சேவைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்காமல் இனியும் புறக்கணிக்கக் கூடாது. வாழ்நாள் முழுவதும் தன்னலம் கருதாத போராளியாக வாழ்ந்த அர்த்தநாரீச வர்மாவுக்கு புகழும், பெருமையும் சேர்க்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்தாண்டு பெரும்பாலான இடங்களில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

Ardhanarishvara Varma Freedom Fighter,Ardhanarishvara Varma,சுதந்திர போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா, மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா,மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட போராளி அர்த்தநாரீச வர்மா,இந்திய தேசிய விடுதலை போராட்ட வீரர் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா