ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு!
தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் சென்னை,மதுரை,கோவை என பல நகரங்களிலும் இயங்கி வருகிறது.இதில் பல்வேறு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா ஒன்றை விரைவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழகத்தின் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழில்துறை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டமானது நடைபெறுவது வழக்கம்.இந்த கலந்தாய்வுக் கூட்டமானது கோவையில் நேற்று கோயின்டியா வளாகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் பல அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
இதில் இந்திய தொழிலக கூட்டமைப்பு,தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம்,தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்,இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள்,தொழிலதிபர்கள் ஆகியோர் பங்கேற்று கோவையின் தொழில்துறை முன்னேற்றத்திற்கு அவர்களின் ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் பேசியபோது,கோவையின் தொழிற்துறை முன்னேற்றம் முன்பைவிடவும் தற்போது அதிகரித்துள்ளது.இந்த முன்னேற்றத்திற்கு அரசு பக்கபலமாக இருக்கும்.ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்காக்கள் மக்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கிறது.மேலும் கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.
கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் ஆகிய ஊர்களை ஒன்றிணைத்து அப்போதே பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.இருப்பினும் அதற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அரசு அதனை கண்டுகொள்ளாததால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டது.இனி வரும் காலங்களில் அந்த பணிகளை அரசு மீண்டும் தொடங்கி விரைவில் செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.இதனால் தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனவும் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.