காங்கிரஸ் கட்சியை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. தற்போது இந்தியாவில் சற்றேற குறைய 75 சதவீத மாநிலங்களில் கூட்டணியிலும், தனித்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். 2 கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்காமல் ஆம் ஆத்மி பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
அப்போது நடைபெற்ற பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் உரையாற்றிய அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த கருத்து பாஜகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது தங்களுடைய அடுத்த இலக்கு குஜராத் மாநிலம் தான் என்று தெரிவித்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த நிலையில், இந்த வருடம் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. ஆகவே பாஜக உட்பட அனைத்து முக்கிய கட்சிகளின் பார்வையும் குஜராத் மேல் விழுந்துள்ளது.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செல்கிறார். குஜராத் மாநிலத்திற்கு இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த மாநிலத்திற்கு பலமுறை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார். ஆகவே 2 நாள் பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு பயணமாகிறார். சூரத் நகரில் 3400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில அரசியலில் கோலோச்சி இருந்த வரையில் அந்த மாநிலத்தில் பாஜகவை யாராலும் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு வலிமைமிக்க ஒரு தலைவராகவும், வலிமைமிக்க மாநில முதலமைச்சராகவும் அவர் தேசிய அளவில் பார்க்கப்பட்டார்.
ஆனால் அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் மாற்றப்பட்டார்.
என்னதான் நாட்டிற்கு பிரதமர் என்ற மிகப்பெரிய பதவிக்கு வந்து விட்டாலும் தன்னுடைய சொந்த மாநிலம் என்ற காரணத்தால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்போதும் குஜராத் மீது தனிக்கவனம் இருந்து வருகிறது.
ஆனால் ஆம் ஆத்மி எங்களுடைய அடுத்த இலக்கு குஜராத் மாநிலம் தான் என்று தெரிவித்தது பாஜகவிற்கு சிறு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான்.
இந்த நிலையில், அஹமதாபாத்தில் இருக்கின்ற நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நாளைய தினம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் புதிய ரயில் போக்குவரத்து சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். அதோடு இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குஜராத் மாநில அரசாங்கமும், பாஜகவும் செய்துள்ளனர்