சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் அடித்ததால் அச்சத்தில் வெளியே ஓடிவந்த போது கால் தடுக்கி கீழே விழுந்ததில் வடமாநில இளைஞர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக வந்துள்ளார். அந்த இளைஞர் மதுபோதையில் ரயில் நிலையம் வந்ததாக தெரிகிறது.
அப்போது, அந்த இளைஞரை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஒருவர் இளைஞர் மதுபோதையில் இருந்ததன் காரணமாக அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அச்சத்தில் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் ரயில் நிலையம் வெளியே ஓடிவந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தடுக்கி கீழே விழுந்ததில் இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. மேலும், இளைஞர் சுயநினைவையும் இழந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து ரயில்வே காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.