19 இடங்களில் ஏ.டி.எம். மூலம் நூதன திருட்டு! 48 இலட்சம் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்!
சிலர் மற்றவர்களை எப்படி ஏமாற்றலாம் என ஒரு முடிவுடனே இருப்பார்கள் போல. ஏ.டி.எம் மிசின் நமது அவசர தேவைக்கு பணம் எடுக்க உதவும் என்று தானே வைத்து உள்ளனர். அதிலும் நாம் கை வரிசை காட்டினால் என்ன தான் செய்வது.
அப்படி ஒரு சம்பவம் வட மாநிலத்தவரால் சென்னையில் மட்டும் 7 இடங்களில் நடந்தேறியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 இடங்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக புகார்கள் வந்துள்ளது.
நாம் பணத்தை பேங்க்ற்கு செலுத்தும் ஏ.டி.எம் மிசினில் குறிப்பாக ஸ்டேட் பேங்க்கு சொந்தமான இயந்திரங்களில் மட்டும் இந்த நூதன திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுடன், பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியும் அளித்தனர். அதில் கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் மூலம் நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளது என்றும் கூறினார்.
இதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு மொத்தம் ரூ.48 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த இழப்பும் ஏற்படவில்லை. மேலும் சென்னையில் கடந்த 17-ந்தேதி, 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக சென்னையில் மட்டும் 7 புகார்கள் வந்துள்ளன.
சாதாரண வங்கி அட்டையை மட்டுமே பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுத்த தகவல் மட்டும் வங்கிக்கு தெரியாதபடி நூதன முறையை கையாண்டு இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். நூதன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த திருட்டு நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரியவந்தவுடன் தங்களது ஏ.டி.எம். மையங்களில் உள்ள அனைத்து எந்திரங்களிலும் பணம் செலுத்தும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
எந்திரத்தில் உள்ள மிக சிறிய தவறை நன்றாக தெரிந்து கொண்டு அவர்கள் இந்த திருட்டை நடத்தி உள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் எங்களிடம் கொடுத்துள்ளது. அது பற்றி நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
தமிழகத்தில் முதல் முறையாக இது போன்ற நூதன திருட்டு நடந்துள்ளது என்றும், வடமாநில கும்பல் இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளை நடந்ததாக சொல்லப்பட்ட ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். 4 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதே போல் மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா? என்று விசாரித்து வருகிறோம்.
மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அதற்கும், இங்கு நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். மேலும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க தனிப்படை அமைத்து உள்ளோம். விரைவில் கண்டு பிடிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
இது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது வங்கியில் இரண்டு நிறுவனங்களின் மிசின்களையே பயன்படுத்துகிறோம். அதில் ஒருவகை இயந்திரத்தில் மட்டும் நூதன திருட்டு நடைபெற்றுள்ளது. எனவே அந்த நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் தர கூறியுள்ளோம் என்றும் கூறினார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் விரைவில் அவர்களை பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாகவும் தெரிய வந்தது.