த்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் !
த்ரிஷா, அவர் நடித்துள்ள பரமபதம் விளையாட்டு எனும் படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளாவிட்டால் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சமீபகாலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் கோலிவுட்டில் அதிகமாக உருவாகியுள்ளன. அந்த வகையில் உருவாகும் கதைகளை வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் நேராகப் போவது ரசிகர்களுக்கு பரிச்சயமுள்ள கதாநாயகிகளிடம்தான். ஏனென்றால் கதாநாயகி மையப்படுத்திய கதை என்றால் அது எப்போதும் ரிஸ்க்தன். அதனால் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக இருந்தால் அவர்களை வைத்து படத்துக்கு புரோமோஷன் செய்ய முடியும் என்பதால்தான்.
அப்படிதான் புது முக இயக்குனரான திருஞானம் என்பவர் த்ரிஷாவை வைத்து பரமபதம் விளையாட்டு எனும் படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு இன்று அந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகையர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் கதாநாயகியான த்ரிஷா மட்டும் வரவில்லை. இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விழாவுக்கு வந்திருந்த தயாரிப்பாளர் ஜி சிவா பேசும் போது ‘தயாரிப்பாளர் திருஞானம் எனது நீண்டகால நண்பர். அவர் இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படத்திலேயே போட்ட காசை திரும்ப எடுக்க முடியவில்லைஇந்த படத்தை திரிஷாவால் மட்டும்தான் ப்ரமோட் பண்ண முடியும். அவரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாகவும் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களாகவும இருக்கின்றனர். இன்றைய விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாததற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். அடுத்த வாரம் படத்தின் ரிலீஸின் போது அவர் கண்டிப்பாக இந்த படத்திற்கு விளம்பரம் செய்து தர வேண்டும். அப்படி இல்லையென்றால் திரிஷா தான் வாங்கிய சம்பளத்தில் பாதியை கொடுக்க வேண்டும். மேலும் தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகையர்களிடம் ஒப்பந்தம் போடும்போதே விளம்பரப் பணிகளையும் சேர்த்து ஒப்பந்தம்ச் செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.