சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!!
ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் இன்று காலை எருதாட்ட விழா நடைபெற திட்டமிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருதாட்ட விழாவில், மாணவர் உட்பட 3 பேர் மரணம் அடைந்தனர். இதனை காரணம் காட்டியும் கரகாட்ட விழா நடத்த வேண்டுமென்றால் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த வருகிறது.
அந்த வகையில் இன்று கோபசந்திரம் கிராமத்தில் நடைபெற்ற எருதாட்ட விழாவுக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சூளகிரி போலீசார் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் வரவைக்கப்பட்டு மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தலைமையில் அப்பகுதியில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்படவில்லை ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகன உட்பட பல்வேறு வாகனங்களை தாக்கி உடைத்தனர்.
இதில் கிருஷ்ணகிரி எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், ஏடிஎஸ்பி சங்கு உட்பட 15க்கு மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டு துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர்.
சாலை மறியல் போராட்டம் குறித்து அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக எருதாட்ட விழா நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்து எருதாட்ட விழாவை நடத்த சென்றனர். காயம் அடைந்த போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அறிந்த சேலம் சரக டி ஐ ஜி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்யும் வகையில் போலீசார் அப்பகுதியில் நின்றவர்களை வளைத்த பிடித்தனர். எருதாட்ட விழா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வந்தவர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர். வாகனத்தில் மாடுகளை ஏற்றி கொண்டு சென்றவர்களையும் போலீசார் பிடித்தனர். போலீசார் எருதாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை பிடிப்பதாக அறிந்த இளைஞர்கள் தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளில் இறங்கி தப்பி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.