மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றது.
ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அங்கங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் வருகின்ற நவம்பர் 15 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக வருகின்ற 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருக்கிறது.
22 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு:
ஏற்கனவே தமிழகத்தில் அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.