மாணவர்கள் கவனத்திற்கு.. “பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு” – தமிழக அரசு நடவடிக்கை!!
இந்தியாவில் அத்தியாவசியமான அடையாள அட்டையாக ஆதார் உள்ளது.பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கட்டாயமாகும்.சிம் கார்டு வாங்குவது முதல் புதிய ரேசன் கார்டு பெறுவது,வங்கி கணக்கு தொடங்குவது வரை ஆதார் எண் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.அது மட்டுமின்றி அரசின் பல நலத்திட்டங்களில் பலன் பெற ஆதார் அவசியமாகும்.தற்பொழுது பள்ளி,கல்லூரிகளிலும் ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் தமிழக அரசு நேரடியாக செலுத்தி வருகிறது.வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும்.ஆனால் பெரும்பாலான மாணவர்களிடம் ஆதார் எண் இல்லை.இந்நிலையில் ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு புதிய ஆதார் எண் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை ‘பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 06 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அந்நாளில் இருந்தே அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த ‘பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு’ திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்திருக்கிறார்.