ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!! இ-பாஸ் எப்படி எங்கு பெற வேண்டும்.. முழு விவரம் இதோ!!
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக திகழும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல தமிழக அரசு இ பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது.
கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் அனைவரும் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடையில் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க குடும்பத்துடன் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் வருகையை முறைப்படுத்த தமிழக அரசு இ பாஸ் நடைமுறையை நேற்று முதல் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் பெறுவது எப்படி?
முதலில் epass.tnega.org என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் உள்நாட்டு சுற்றுலா பயணியாக இருந்தால் தங்கள் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.இந்த எண்ணை பதிவிட்டு உள் நுழைய வேண்டும்.
பிறகு நீங்கள் எங்கு சுற்றுலா செல்கிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும்.அதாவது ஊட்டி அல்லது கொடைக்கானல் இதில் எது என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு இ பாஸ் பெற இருக்கும் விண்ணப்பதாரரின் பெயரை குறிப்பிட வேண்டும்.பின்னர் ஊட்டி அல்லது கொடைக்கானலுக்கு வருவதற்கான உரிய காரணத்தை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் தாங்கள் வர இருக்கும் வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.பிறகு தங்களுடன் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.
பிறகு தங்கள் வாகனம் உற்பத்தியான வருடம்,நீங்கள் வைத்திருக்கும் வாகனம் எந்த வகையை சேர்ந்தது,வாகனத்திற்கு பயன்படுத்தும் எரிபொருளின் வகையை குறிப்பிட வேண்டும்.
அதன் பிறகு ஊட்டி அல்லது கொடைக்கானலுக்குள் நுழையும் நாள் மற்றும் வந்த வேலை முடிந்து வெளியேறும் நாள் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.இந்த நடைமுறையை பின்பற்றினால் எளிதில் இ பாஸ் பெறலாம்.
ஒருவேளை நீங்கள் வெளிநாட்டுப் பயணியாக இருந்தால் தங்களின் இ.மெயில் முகவரியை பயன்படுத்தி மேலே சொல்லப்பட்டுள்ளபடி விண்ணப்பித்து இ பாஸ் பெறலாம்.