ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

0
118

ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

ஆஸ்திரேலியாவின் வெப்பநிலை உயர இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பருவநிலை மாற்றமே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ  காற்றின் வேகத்தில் மிக வேகமாக பரவும் என இயற்கை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இந்த காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீயில் சாம்பலாகின, இதன்காரணமாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் விக்டோரியா கடற்கரையில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

இந்த காட்டுத் தீ விபத்தினால் 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக சிட்னி பல்கலையின் பேராசிரியர் கிறிஸ் டிக்மேன் கூறிய கருத்து பிபிசி செய்தி நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தின் காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இயற்கைக்கான உலகளாவிய நிதியத்திற்காக ( WWF ) மற்ற ஆய்வாளர்களுடன் ஆலோசித்து எழுதிய அறிக்கையை வைத்தே இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 20.7 பறவைகள், 129.5 ஊர்வன மற்றும் 17.5 பாலூட்டிகள் ஆகியன வாழ்வதாக குறிப்பிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் காட்டுத்தீ ஏற்பட்ட நிலப்பரப்புகளை வைத்து உயிரிழப்பு கணக்கீட்டை கூறியுள்ளனர்.

தற்போது மூன்று மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்புகளில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் 480 மில்லியன் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன போன்றவை பாதிக்கப்பட்டிருக்கும்.

காடுகளை நம்பியே வாழும் பல்வேறு உயிரினங்களும், வேறு இடங்களுக்கு நகரமுடியாத விலங்குகளும் காட்டுத்தீயில் சிக்கி இருக்கும். தப்பிய விலங்குகள் தங்க இடமின்றி உணவின்றி உயிரிழக்க கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
காட்டுத்தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.