பால்,தயிர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு பரிசீலனை…

0
128

பால், தயிர், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், தொடர்ந்த வழங்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் அதன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும் அத்துமீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 52 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  பால், தயிர், எண்ணெய் பாக்கெட் மற்றும் சீலிட்ட கவரில் விற்பனை செய்யப்படுவதற்கு அளித்த அனுமதியை தளர்த்தக்கோரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், அதன்படி பால் பாக்கெட் உள்ளிட்ட விலக்கு அளிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறதுஎன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பையில் விற்பனை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து தொடங்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும்,  விசாரணையை ஏப்ரல் 28-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.