சென்னையில் பரிதாபம்! உணவு, உடைக்காக சண்டை போட்டுக்கொள்ளும் மக்கள்?

0
147
awful-in-chennai-people-fighting-for-food-and-clothing

சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த பொதுமக்கள், அடிப்படை தேவைகளுக்காக மாறி மாறி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், வீடு மற்றும் உடமைகளை இழந்து, பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்டவை ஆகியவற்றை செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அவற்றை முறையாக திட்டமிடாமல், நிவாரணப் பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்களிடையே மோதல் ஏற்படும் விதமாக, நிர்வாகம் அலட்சியம் காட்டியுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காக ஒரு இடத்தில் திரண்டனர். அப்போது, குடை, உடை உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக மக்கள் முன்பு வைத்ததால், அவர்கள் முண்டியடித்துக் கொண்டு, அதனை எடுக்க முயற்பட்டனர்.

அப்போது, கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணும் ஆபத்தை உணராமல் அந்தக் கூட்டத்தில் முட்டி, மோதி தனக்கு தேவையான பொருளை எடுக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழை, வெள்ளம் எச்சரிக்கையை தொடர்ந்து, நிவாரணப் பொருட்களை எப்படி வழங்குவது என்பதை தமிழக அரசு முன்கூட்டியே சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும், மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பெற போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மேலும், இந்த அலட்சியத்தினால்,கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் இருப்பதால், இனி இதுபோன்று நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்

பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருவது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், இதுபோன்ற செயல்களினால் அரசுக்கு அவப்பெயரே ஏற்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.