தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை(சரஸ்வதி பூஜை) மற்றும் விஜய தசமி.இந்த பண்டிகைகள் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வருகிறது.தமிழகத்தை போன்று கர்நாடக மற்றும் ஆந்திராவில் இது முக்கியமான பண்டிகையாக திகழ்கிறது.
நாம் செய்யும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்கு திருநீறு பட்டை போட்டு சந்தனம் மற்றும் குங்குமத்தில் பொட்டு வைத்து வணங்குவதால் தான் இது ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது.அதேபோல் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக திகழ்கிறது.
மனிதர்களின் வாழ்வில் கல்வி மற்றும் தொழில் இரண்டுமே முக்கியமானவையாகும்.இந்த இரண்டையும் வணங்குவதற்காக ஆயுதபூஜை(சரஸ்வதி பூஜை) கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த சரஸ்வதி பூஜை நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.நவராத்திரியின் ஒன்பதாவது நாளான சரஸ்வதி பூஜை வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட இருக்கிறது.
இந்நாளில் புதிய தொழில்,வியாபாரம்,சொத்துக்கள் வாங்கினால் அதில் நல்லநிலை அடைவார்கள்.அதேபோல் இந்நாளில் சரஸ்வதிக்கு பூஜை செய்து வழிபட்டால் கல்வியில் உயர்ந்தவராக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
சரஸ்வதி பூஜை அன்று வீட்டை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மாவிலை நுழைவாயிலில் கட்டி வீட்டிலுள்ள இரும்புகளுக்கு பட்டை பொட்டு வைக்க வேண்டும்.அதன் பிறகு பூஜையில் அறையில் உள்ள கடவுளின் படங்கள் மற்றும் விளக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு கடவுள் படங்களுக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து விளக்கேற்றவும்.அடுத்து வாழை இலை வைத்து கடலைபொரி,கடலை மிட்டாய்,எள் மிட்டாய்,வாழைப்பழம்,கொய்யா,ஆப்பிள்,சாத்துக்குடி,திட்ராட்சை போன்ற பொருட்களை வாழை இலையில் வைத்து கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும்.