Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொது மக்களே ஜாக்கிரதை! ஆவணங்கள் இல்லாத 9 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்!

தற்போது தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் இந்த வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது.அதன்படி ஆவணங்களின்றி பணத்தை எங்கும் எடுத்துச் செல்ல இயலாது. அவ்வாறு எடுத்துச் சென்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்வார்கள்.

அந்த விதத்தில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அந்த பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது அந்த காரில் கட்டுகட்டாக 9 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்திருக்கிறது.

இதுதொடர்பாக பணத்தின் உரிமையாளரான தேவி பட்டினத்தைச் சேர்ந்த மாரிமுத்துவிடம் விசாரணை செய்தபோது பத்திரப்பதிவுக்காக பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருக்கிறார்.

ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதோடு உரிய ஆவணங்களை காட்டிவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

Exit mobile version