Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா?  ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன?

அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா?  ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன?

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின் அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணமாக அண்ணாமலையின் திமுக எதிர்ப்பும் அவருடைய ஆக்ரோஷமான பேச்சுமே கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று அவர் தன்னுடைய வழக்கமான அந்த ஆக்ரோசத்தை குறைத்துக் கொண்டு வழக்கமான அரசியலை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளில் வழக்கமான ஆக்ரோஷம் குறைந்து காணப்படுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு முன் தமிழக பாஜக தலைவராக செயல்பட்ட எல் முருகனக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்ட பின், கட்சியில் ஏகப்பட்ட சீனியர்கள் இருக்க IPS அதிகாரியான அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இதனையடுத்து மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாளிலிருந்து திமுகவுக்கு எதிரான அரசியலை சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் தினம் திமுகவின் செயல்பாடுகளை விமர்சிப்பது மற்றும் அதன் அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பது, தமிழக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள்  குறித்து பேட்டி என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் அக்கட்சி வளர்ச்சியடைவதாக கருதப்படுகிறது

பிடிஆர்- அண்ணாமலை மோதல்

தமிழ்நாட்டின் பல்வேறு மாநில நிர்வாகிகளை சந்திப்பது, மோடி அரசின் சாதனைப் பொதுக்கூட்டங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சிப்பது என தீவிரமாகவே அண்ணாமலை செயல்பட்டு வந்தார். ஆனால் மதுரை விமான நிலையத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் தேசிய அளவில் விவாத பொருளானது. அதேபோல் நிதியமைச்சரை செருப்புடன் ஒப்பிட்டு பேசியது தமிழக அரசியலில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

 எல் முருகனுக்கு தனி அறை

இந்நிலையில் தமிழக அரசியலில் பம்பரமாக சுழலும் அண்ணாமலையின் செயல்பாடுகள் பாஜக சீனியர்களையே ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில் தான் மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கு கமலாலயத்திலேயே அறை ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் மீண்டும் எல் முருகன் கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் அண்ணாமலையின் மாநில தலைவர் பதவிக்கான அதிகாரம் சற்று  குறைந்ததாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மீண்டும் சர்ச்சை

இந்நிலையில் எல் முருகன் தமிழக அரசியல் பக்கம் திரும்பியதால், அண்ணாமலை சிறிது காலம் அமைதியாக இருந்து வந்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஆளுநரிடம் புகார் அளிக்க எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் குழுவை அனுப்பி வைத்துவிட்டு, இவரே செய்தியாளர்களை சந்தித்து இது குறித்த விஷயத்தை தெரிவித்தார். அப்போது நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஒருவர் அண்ணாமலை காலில் விழுந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.அது திட்டமிட்டு நடத்தப்பட்டது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.

போராட்டம் இல்லை

இதனையடுத்து கபடி போட்டி, மோடி பிறந்தநாள் விழா என தொடர்ந்து நடந்த நிகழ்சிகளில் அண்ணாமலை அமைதியாக செயல்படுவது அக்கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை.

இந்நிலையில் இந்து மதம் பற்றி ஆ.ராசா பேசிய பேச்சை ட்விட்டரில் பதிவிட்டு கண்டனம் தெரிவிக்க, பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் வழக்கு தொடர்வது மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்னர் தற்போது போராட்டம் நடத்தப் போவதில்லை. மக்களை சந்தித்து கையெழுத்து பெறப்போகிறோம் என்று புதிய பாதையை அவர் தொடங்கியுள்ளார்.

நாளை பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா வரவுள்ள நிலையில், கட்சியில் நிர்வாக ரீதியாகவும், நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டும் அண்ணாமலை வியூகத்தில் இன்னும் பல மாற்றங்கள் வரலாம் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version