பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

0
164

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

நேற்று முன்தினம் திருநெல்வேலி அருகே கண்டித்தான்குளம்,மூகாம்பிகை நகர் வெள்ளநீர் கால்வாயில் அழுகிய நிலையில் சடலமொன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இது தொடர்பான திருநெல்வேலி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அக்கம்மாநாயக்கனுரை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. மேலும் செந்தில் குமாரை காணவில்லை என்று அவரது மனைவி ஈரோடு காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

முன்னீர்பள்ளம் போலீசாரும், ஈரோடு தெற்கு போலீசாரும் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர் இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்ட பாஜக வர்த்தக அணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்ததும்,மேலும் அவர் டிராவல்ஸ் ஒன்றை நடத்தி வந்ததும் தெரியவந்தது.மேலும் இவருக்கும்,அப்பகுதியை சேர்ந்த 22 வயதான இளம் பெண்ணுக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளதும், இதனை அப்பெண்ணின் உறவினர்கள் கண்டித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி,திருநெல்வேலிக்கு திருமண நிகழ்ச்சிக்கு வாடகை கார் வேண்டுமென்று சிலர் செந்தில்குமாரை செல்போனில் அழைத்துள்ளனர்.இதனை நம்பி ஈரோட்டிற்கு தனது நண்பர் சீனிவாசனுடன் வாடகைக்காக செந்தில்குமார் சென்றுள்ளார்.
திருநெல்வேலி செல்லும் வழியில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நான்கு வழிச்சாலையில் சீனிவாசனை கத்தியை காட்டி மிரட்டி காரிலிருந்து வெளியே இறக்கி விட்டுள்ளனர் அந்த கும்பல்.பின்னர் செந்தில் குமாரை கொலை செய்து முன்னீர்பள்ளம் கால்வாயில் வீசிவிட்டு,அந்த காரிலேயே ஈரோடு தப்பிச் சென்றுள்ளது அந்த கும்பல்.விசாரணையில் காரில் 5 நபர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே செந்தில்குமாரின் மனைவியான தனலட்சுமியிடம், சீனிவாசன் நடந்ததை கூறியதையடுத்து,தனலட்சுமி கடந்த 15ஆம் தேதி ஈரோடு தெற்கு போலீசில் செந்தில்குமார் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார்.இந்நிலையில்தான் முன்னீர்பள்ளம் கால்வாயில் செந்தில்குமாரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.காவல்துறை தரப்பில் செந்தில்குமாரை கொலை செய்து வீசிய கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் செந்தில்குமாரின் நண்பரான சீனிவாசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.