சசிகலாவை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் களத்தையும் பலவீனப்படுத்தி, ஓட்டுக்களை பிரிக்க இருப்பதாக ஆளும் பாஜக அரசும், மோடியும் முயற்சிக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் எனவும், பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எச்.ராஜா, எல்.முருகன் போன்றோர் கூறிவருகின்றனர்.
இந்தநிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:
“கொரோனா ஊரடங்கினால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான 6 மாத வட்டியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு வட்டியினை தள்ளுபடி செய்தால் இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில்கள் அதற்கு கீழே உள்ள தொழில் செய்பவர்கள் என அனைவரும் தப்பித்துக் கொள்வார்கள் என அறிவுறுத்தியுள்ளார்”.
சசிகலா குறித்து பேசிய அவர், “சசிகலா விஷயத்தில் சிந்துபாத் கதைபோல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இன்னும் சசிகலாவின் சொத்துகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். திடீரென்று அவரது சொத்துகளை முடக்குகின்றனர்.
சசிகலாவை ஒரு ஆயுதமாக வைத்து அதிமுகவை பலவீனப்படுத்தலாமா? தமிழ்நாட்டின் அரசியல் களத்தை பலவீனப்படுத்தலாமா? என ஆளும் பாஜகவான மத்திய அரசும், மோடியும் முயற்சிக்கின்றனர்.
இது தவறான முயற்சியாகும். தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ்தான் முதன் முதலில் பணியை தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.