Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் மத்திய அமைச்சர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து சேலம் சீலநாயக்கன்பட்டி யில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்று கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்று கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாநில தேர்தல் குழு தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவித்தாலும் அந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழகம் முழுவதும் பாஜக தயாராக இருக்கிறது. தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்தி வருகிறது என்று கூறியவர், திருவள்ளுவர் பிறந்த நாள் மற்றும் தமிழ்புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் தந்தது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பாரம்பரியம், பாரம்பரியமாக கடைபிடித்து வரும் நடைமுறைகளை மாற்றுவதற்காக மக்கள் யாரும் திமுக அரசுக்கு வாக்களிக்கவில்லை. கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரம் வேதனை தருகிறது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் தடம்மாறி போவதற்கு தமிழகம் போதை மாநிலமாக மாறி வருவதை காரணம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் சர்வசாதாரணமாக, போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதத்திற்கு உள்ளேயே தமிழகத்தை எவ்வளவு சீரழிக்க முடியும் என்பதை திமுக அரசு கண்கூடாக காட்டி இருக்கிறது. ஆகவே முதலமைச்சர் சிறப்பு படை அமைத்து தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகத்தை தடுத்து இளைஞர்களை காக்கவேண்டும். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம் மாநில அரசுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும், பொருளாதார நெருக்கடி இருக்கிறது மத்திய அரசு எந்த விதத்தில் சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகிறது என்பதை முதலமைச்சர் விளக்கமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version