பாஜகவில் நான் அதிருப்தியில் இருந்தேன். அதனால் எனக்கு பாஜகவின் தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளனர் என பாஜகவின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு கூடுதலாக தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளதை அடுத்து, அவர் பதவியேற்ற பின்பு திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பில் அங்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழக பாஜகவில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளது எப்படி என்று தெரியவில்லை.
ஒரு கட்சியில் திறமை, உழைப்பால் கொடுக்கப்படும் பதவியால்தான் ஆளுமை மிக்க தலைவர் உருவாகுவார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவில் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களே ஆளுமை மிக்க தலைவர்களாக தமிழ் நாட்டை ஆள்வார்கள்.
தேர்தல் பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் யாரெல்லாம் கூட்டணியில் இருப்பார்கள் என்பது பற்றி தெரியும். பாஜக நாளை ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ளதாக தற்போதைய சூழல் உள்ளது. கட்சியின் கூட்டணி குறித்து அகில இந்தியத் தலைமை தான் முடிவு செய்யும்.
மேலும் நான் பாஜகவில் அதிருப்தி அடைந்தது உண்மை தான். அதிருப்தியில் இருந்ததால் தான் எனக்கு எனக்கு தென் மாநில பொறுப்பாளர் பதவி கொடுத்தார்கள் என்றால், எனக்கு மாநில பொதுச்செயலர் பதவிதான் கொடுத்திருக்க வேண்டும்.
வருத்தம் தான் இருந்தாலும், தற்போது பாஜகவில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் இந்த பதவியை எனக்கு கொடுத்துள்ளனர்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.