மேஜிக் மோடி.. அசுர வெற்றியில் பாஜக! குஜராத்தில் கெத்தாக மலர்ந்த தாமரை

0
290
Modi-News4 Tamil Online Tamil News

மேஜிக் மோடி.. அசுர வெற்றியில் பாஜக! குஜராத்தில் கெத்தாக மலர்ந்த தாமரை

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக 157 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்கிறது.

குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பது கூடுதல் ஸ்பெஷல் காரணங்கள். 6 முறை குஜராத்தை ஆண்ட பாஜக, 7 வது முறையும் ஆட்சியை பிடிக்கும் வியூகங்களை கையில் எடுத்தது.

பாஜக மீது அதிருப்தி

அதேசமயம் நிறைய அதிருப்திகளை பொதுமக்களிடம் மாநில பாஜக பெற்றிருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை மக்களை அதிகமாகவே பாதித்தன. 3.65 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்யும் நிலைமை ஏற்பட்டது. விவசாயிகளுக்கு போதுமான நிவாரணம் வழங்கப்படவில்லை.

In pictures | Morbi bridge collapse - News4 Tamil

சமீபத்தில் நடந்த 140 உயிர்களை பலிவாங்கிய மோர்பி பால விபத்து பாஜகவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இஸ்லாமிய வேட்பாளராக ஒருவரைக்கூட களத்தில் நிற்கவைக்கவில்லை. அதேபோல, பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுவித்த நிலையில், நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இப்படி ஏராளமான எதிர்மறை கருத்துக்களுடன், மக்களின் அதிருப்திகளுடன்தான் பாஜக அவர்களிடம் ஓட்டு கேட்க சென்றது.

பாஜகவின் சாதிய அரசியல்

பிரதமர் மோடி முதல் அமித்ஷா வரை, குஜராத் பிரச்சாரத்திலேயே பெரும்பாலான நேரங்களை கழித்தனர். வழக்கமாக பிரச்சாரங்களில் காங்கிரஸை விமர்சிக்காமல், தங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் குடைச்சலை தந்து வரும் ஆம் ஆத்மியை அட்டாக் செய்து பேசினார்கள். சாதீய வாக்குகளை பெரிதும் நம்பியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தீர்ப்பானது, இந்த குஜராத் தேர்தலுக்கு மிகவும் அடித்தளமாக இருந்தது என்பதையும் சொல்ல வேண்டி உள்ளது.

காரணம் படிதார் சமுதாயம் மற்றும் சௌராஷ்டிரா பகுதி மக்கள்தான் இதனால் நேரடி பலனை பெறுகின்றனர். இவர்களில் 15 சதவீத மக்கள்தான், மாநில தேர்தல் வெற்றியை தீர்மானிக்கக்கூடியவர்களாவும் இருக்கிறார்கள். இலவசங்கள் குறித்து விமர்சித்து வரும் பாஜக, இந்த தேர்தலில் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பியது. அந்த வகையில் பாஜகவின் தேர்தல் வியூகங்கள் பலரையும் திகைக்கவே செய்தன.

பொய்யாகிய கருத்துக்கணிப்பு

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பிலும்சரி, எக்ஸிட் போல் எனப்படும் பிந்தைய கருத்து கணிப்பிலும் சரி, பாஜகவே இமாச்சல பிரதேசம், குஜராத் தேர்தல்களில் அபார வெற்றி பெறும் என்றார்கள். ஆனால், ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மீதான நம்பிக்கை அம்மக்களுக்கு இன்னமும் நிறையவே இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை இன்று நிரூபணமாகி உள்ளது. அதேசமயம், குஜராத்தில் பாஜகவின் அபார வெற்றி என்பது கருத்து கணிப்புகளையும் தாண்டி, எங்கோ சென்றுவிட்டது.

இதற்கு முக்கியமான காரணம், யாரை வேட்பாளராக முன்னிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து தான், பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. சாதி அரசியல் இங்கும் வேலையை காட்டியது. ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு சீட் தந்ததின் பின்னணியில் இருந்தே இதை அணுக வேண்டி உள்ளது.

பாஜகவின் B-டீம்

ஒவ்வொரு முறையும் பாஜகவின் B-டீமாக, ஓவைசி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வலுவாகி வரும் நிலையில், குஜராத்திலும் ஓவைசி என்ட்ரி தந்தது பலருக்கும் குழப்பத்தையே தந்தது. எதிர்பார்த்தபடியே முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரிந்துள்ளன. எதிர்பார்த்தபடியே, அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

சுருக்கமாக சொல்லப்போனால், ஓவைசியின் முஸ்லிமீன் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் தான் பாஜகவின் வெற்றிக்கு உதவியது என்றே சொல்லலலாம். இந்த இரு கட்சிகளும் இணைந்து, இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதிகளில், காங்கிரஸ் வாக்கு வங்கியில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தி விட்டதால், அதன்மூலம் பாஜகவுக்கு அபார வெற்றி கிடைத்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமுள்ள தாரியாபூர் தொகுதி என்பது முஸ்லிம்களுக்கு சாதகமான தொகுதியாகும். ஆனாலும், காங்கிரஸ் வேட்பாளரை பாஜக எளிதாக தோற்கடித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸுக்கு செல்ல வேண்டிய மெஜாரிட்டி வாக்குகளை ஓவைசி கட்சியும், கெஜ்ரிவால் கட்சியும் உள்ளே நுழைந்து பிரித்துள்ளனர். பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுவித்த நிலையில், இந்த கொடூர பாலியல் பலாத்காரம் நடந்த கோத்ராவில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றுள்ளதும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்து வருகிறது. “நான் உருவாக்கிய குஜராத்” என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தை தொடங்கியபோது ஏகப்பட்ட விமர்சனங்கள் வெடித்து கிளம்பின. ஆனால், அவையெல்லாம் இன்று நொறுங்கி விழுந்துள்ளன.

மோடி மேஜிக்

அத்துடன் “மோடி மேஜிக்”, “மோடி அலை” போன்றவை எல்லாம் இன்னமும் குஜராத்தில் முழுவீச்சில் வீசுகிறது என்பதும் இன்று நிரூபிணமாகி உள்ளது. ஆனால், பாஜகவை வென்றெடுக்க, காங்கிரஸ் கட்சியானது, நீண்ட தூரம் பயணத்தை பயணத்தை துவக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.