பாமக, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை வைத்து திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்பிருக்கிறது.
இதனை விசிக தலைவரான தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகள் குறித்து பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் செய்தியாளர்களிடம், “விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை” என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார்.
இதன் மூலம், பாமகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே கூட்டணியில் அமையமா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
இந்தநிலையில், இதனை திட்டவட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நிராகரித்துப் பேசியுள்ளார். “பாமகவுடன் எந்த காலத்திலும் இனி கூட்டணியே இல்லை என்றும், மிகக் கடுமையாகவும் பாமக கட்சியை திருமாவளவன் விமர்சித்திருந்தார்.
இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், “பாரதிய ஜனதா கட்சியும், பாமகவும் சனாதான அரசியலை கையில் எடுத்திருக்கிற கட்சிகள்; சாதியவாதத்தையும் மதவாதத்தையும் தேர்தல் அரசியலுக்காக கையில் எடுத்திருக்கிறார்கள்”.
“அந்த அரசியல் கட்சிகளுடன் எந்தச் சூழ்நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கூட்டணி வைக்காது என தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறோம். இதை திமுக, அதிமுகவுடன் முடிச்சு போடக் கூடாது” என கூறினார்.
அப்போது, திமுக கூட்டணியில் பாமக இணைந்தால், அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி விடும் என எடுத்துக் கொள்ளலாமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,
“உங்கள் யூகம் என்னவோ அதற்கு நான் இடையூறாக இருக்க விரும்பவில்லை. அதேபோல் திமுக 200 இடங்களில் போட்டியிடும் நிலை வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி வரும்” என்றும் அந்த பேட்டியில் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் பாமகவிற்கும், கூட்டணியில் தொகுதி பங்கீட்டு விவகாரங்களை முன்வைத்து திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சி வெளியேறலாம் என்பதை மறைமுகமாகவே திருமாவளவன் கூறியுள்ளார் என கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.