Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா தடுப்பூசி போட்டிருக்கீங்களா? அப்போ 2 மாசத்துக்கு இதை செய்யவே கூடாதாம்!

Covid 19

Covid 19

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது.

தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவதற்காக நேரு உள் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு 28 நாட்களுக்குப் பிறகே இரண்டாவது டோஸ் போடப்படும். சிலருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு வாரத்துக்குள் மிதமான காய்ச்சல், உடல் வலி, தலைவலி, அசதி போன்ற சிறிய அளவிலான தொல்லைகள் ஏற்படக் கூடும். அப்போது ரத்த தானம் செய்யக்கூடாது. ஒரு வாரம் கழித்து ரத்ததானம் செய்யலாம் என்ற வழிமுறை உலக அளவில் பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையே 28 நாட்கள் இடைவெளி இருப்பதால் அப்போதும், இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட நாளில் இருந்து 28 நாட்களுக்கும் ரத்த தானம் செய்யக்கூடாது என தேசிய ரத்தமேற்றும் கழகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறைந்தபட்சம் 57 நாட்களில் இருந்து இரண்டு மாதங்கள் கழித்து ரத்த தானம் செய்வது சிறந்தது என்றும் தெரிவித்துள்ளது.

ஒருவேளை கரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்டவரின் ரத்தத்தைப் பெற்றுக் கொள்பவருக்கு சுயத்தடுப்பாற்றல் சீர்குலைவு என்ற நோய் இருந்தால், புதிதாக செலுத்தப்பட்ட ரத்தத்தில் உள்ள கொரோனா எதிரணுக்கள் அந்தநோயுள்ளவரின் உடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் தான் இந்த கால அவகாசம் கடைபிடிக்கப்படுகிறது.

Exit mobile version