உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
இதனால் பொது இடங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களையும் கடைத்தெருக்களில் கூட்டம் கூடும் பொது மக்களிடமும் காவல்துறை கண்டிப்பு காட்டி வந்தது. இதற்கு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு காட்டி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் காரில் வந்த பெண் ஒருவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த அப்பெண் அந்த ஆய்வாளர் மீது எச்சில் துப்பி தகாத வார்த்தைகளால் பேசி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்.
இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது கோபத்தை டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். காவல்துறையினர் மக்களைப் பாதுகாக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களை அவமானம் செய்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது என்று அதில் கூறியுள்ளார்.